புத்தகங்களே ஒரு மனிதனை சிறந்தவனாக உருவாக்கும் என கள்ளக்குறிச்சி புத்தக திருவிழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் பேச்சு
கள்ளக்குறிச்சி சென்னை பைபாஸ் திடலில் நடைபெற்று வரும் கல்லை புத்தகத்திருவிழாவில் சிறப்பு விருந்தினராக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
ஈராயிரமாண்டு இலக்கிய வரலாறு :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் புத்தகத் திருவிழாவை சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. நான் முதன்முதலில் அரசு பணியை தொடங்கியது விழுப்புரம் மாவட்டத்தில்தான் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புகளை நான் தேடிதேடி பார்வையிட்டுள்ளேன். திருக்கோவிலூரில் உள்ள கபிலர் குன்றின் கல்வெட்டுகளை பார்வையிட்டுள்ளேன். ஈராயிரம் ஆண்டு இலக்கிய வரலாற்றில் தமிழ் சமூக பண்பாட்டு வரலாற்றில் பல்வேறு எழுத்தாளர்களால் எழுத்தப்பட்டுள்ள ஊர் நமது கள்ளக்குறிச்சி மாவட்டம். புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டு, சிறப்பாக இந்த புத்தகத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்புத்தகத் திருவிழா மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றியடைந்ததாக காணுகிறேன். இந்த வெற்றி என்பது புத்தக விற்பனையை வைத்து மட்டும் கணக்கிட முடியாது. ஒரு புத்தகம் குரலற்றவர்களின் குரலாக இந்த சமூகத்திடமும் அரசாங்கத்திடமும் எவ்வாறு பேசுகிறது, தனி மனிதரிடம் எவ்வாறு பேசுகிறது என்பதே ஒரு புத்தகத்தின், ஒரு எழுத்தாளரின் வெற்றியாக கணிக்க முடியும். ஒரு புத்தகத்தின் ஒரு வரி, ஒரு மனிதனின் ஊன்றுகோலாக நின்று, உலகில் பல உயரங்களை அவன் எட்டுவதற்கு உதவுகிறது. பள்ளி மாணவர்கள் இப்புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டதே இப்புத்தகத் திருவிழாவின் வெற்றியாகும். இந்த பள்ளி குழந்தைகள் புத்தகங்களை காணும் போது அதனை வாங்கிப் படிக்க வேண்டும் என்று வரும் உந்துதலே, ஒரு மாணவனை தவறான பாதையில் செல்வதை தடுக்கும். இதுவே பெரிய வெற்றி. ஒரு புத்தகத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதாரண செயல் அல்ல. நமது தட்டில் வரும் உணவு எப்படி பல்வேறு செயல்பாடுகளுக்குப்பின் கிடைக்கிறதோ அதேபோன்றுதான்.
தமிழ் கலைக்களஞ்சியம் :
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரஞ்சு, ஐரோப்பிய நாடுகளில் அவர்களது மொழியில் கலைக்களஞ்சியம் என்னும் புத்தகத்தினை தயாரிப்பதற்கு முயற்சிகள் செய்தார்கள். இந்தியா சுதந்திரத்திற்குப் பின் இதேபோன்ற ஒரு தேடலில் உருவாக்கப்பட்டதுதான் தமிழ் கலைக்களஞ்சியம் என்ற புத்தகம். இது பதினைந்து ஆண்டுகள் முயற்சி செய்து எழுதிய புத்தகம். ஏறத்தாழ 7,500 பக்கங்கள் இருக்கும். பல்வேறு துறைகளில் வல்லமை பொருந்திய 1,200 நபர்கள் இணைந்து எழுதிய புத்தகம் தமிழ் கலைக்களஞ்சியம். கலைக்களஞ்சியத்தின் கதை என்ற புத்தகத்தினை புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.வெங்கடாசலபதி என்பவர் எழுதியிருந்தார். இதனை படிக்கும் போதுதான் ஒரு புத்தகம் தயாரிப்பதற்கு எவ்வளவு உழைப்பினை செயல்படுத்திட வேண்டும் என்பதை நாம் உணர முடியும்.
வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பன்னிப்பார் என்பதுடன் புத்தகத்தை எழுதிப்பார் என்றும் சொல்ல வேண்டும். ஒரு புத்தகம் என்பது எழுத்தாளரின் அனுபவப் பதிவு. மேலும், பிற மொழியினைச் சேர்ந்த கால்டுவெல் என்பவர் 19-ஆம் நூற்றாண்டில் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் தமிழ் என்ற ஒரு மொழி தனித்து இயங்கக் கூடியது என்றும், இலக்கிய இலக்கண செல்வங்கள் கொண்டது என்றும் ஆதாரத்துடன் கூறினார். ஜி.யு.போப் என்பவர் திருக்குறள், திருவாசகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை பல்வேறு மொழிகளில் மொழிப் பெயர்த்துள்ளார். அதேபோன்று பிற மாநிலத்தைச் சேர்ந்த நமது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், விரைவில் தமிழில் புத்தகம் எழுதும் அளவிற்கு தமிழ் மொழியினை கற்பார் என நான் நினைக்கிறேன். தமிழ் சமூகத்தின் மனித வளத்தினை சிறப்பாக உருவாக்கும் ஒரு முக்கிய புள்ளியாக இப்புத்தகக் கண்காட்சி அமையும். 2023-ஆம் ஆண்டு உலக அளவில் அதிக மக்கள் தொகை நாடாக உருவாகப்போகும் இந்தியாவினை புத்தகங்களே சிறப்பாக உருவாக்கும். இதுபோன்ற புத்தகக் கண்காட்சியினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என செய்தி மக்கள் தொடர்புத்துறை, இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி.ச.பவித்ரா (கள்ளக்குறிச்சி), ஜெ.யோகஜோதி (திருக்கோவிலூர்) மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.